Thursday, 9 August 2018

சித்தர்கள் தரிசனம்..! முதல் பாகம்

                                              தமிழ் முனிவன் தாள் பணிந்து


                                            சித்தர்கள் தரிசனம்..!
                                                           முதல் பாகம்


             ருள் வெளியின் ள்ளுணர்வில் பூத்த ரகத மலர்கள் சித்தர் பெருமக்கள்.
மானுடம் தழைக்க இம்மண்ணில் தோன்றிய மாமேரு, இயற்கை இயற்றிய அபூர்வ சிருஷ்டிகள் !
மனித குலத்திற்குக் கிடைத்த  அமுதகலசம், அற்புதப் பொக்கிஷங்கள் !
உலகம் உய்வு பெற ஆதி பகவன் ஈந்த அருட்கொடைகள் !
ஆதிபிரம்மம் அறிந்த அமிர்த சஞ்சீவி !
கலைகளின் கருவூலம், அறிவியலின் ஆன்மா !
நாத விந்துகளின் அதிபர், வேதமந்திர சொரூபர் !
அடிமுடி அறிந்த பிரணவத்தின் பீடாதிபதிகள் !
அறிவியலுக்கு அறிவியலாய், அருளியலுக்கு அருளியலாய் ,
விஞ்ஞானத்தை வியக்க வைத்த மெய் ஞானத் தத்துவங்கள் !
வாழ்க்கைக்கு முன்னோடி, வையகத்திற்கு வழிகாட்டி !
வாழ்வியலை வையகத்திற்கு உபதேசித்த ஞானாசிரியன் !
சித்தத்தினை வென்று செயற்கரிய செய்த பெரியர் !
மொத்தத்தில் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞானிகள்,
அற்புதம் நிறைந்த கற்பகத் தருக்கள் !
அதிசயமே அதிசயித்த அதிசயங்கள் !

உடம்பினுள் உயிர்; உயிரினுள் மனம்
மனத்தினுள் கரு; கருவினுள் கற்பகத்தரு !
கற்பகமே பூரணம்; பூரணத்தில் மௌனம் 
மௌனத்தில் தவம்; தவத்தில் யோகம்
யோகத்தில் ஞானம்; ஞானத்தில் சித்தி !
சித்தியில் சிவம் ! சிவத்தில் சித்தன் !

“ தானான தலையறிந்தா லவனேயோகி
      தலைப்பிள்ளைப் பேரறிந்தா லவனே வாதி
பேனான பிண்டமதை யறிந்தோன் ஞானி
      பேசினோ மண்டமறிந் திடுவோன் மௌவுனி
கானான கலையறிந்தோன் வேதாந்தியாகும்
      கண்ணோட்ட மறிந்தவனே தவசியாகும்
ஊனான வுருவறிந்தோன் சித்தன் சித்தன்
     உருளையென்ற கல்லறிந்தோன் ரிஷிதான் பாரே .”
                                  - அகத்தியர் சௌமிய சாகரம்

மனம்... காலம் கொடுத்த காண்டீபம் !
அதனைக் கையில் ஏந்தும் அர்ஜுனன் மனிதன் .
அவனை ஞான வீரனாக்கும் கீதை சித்தவியல் தத்துவம் .
அதனை உபதேசித்த புருஷோத்தமர் சித்தர் பெருமக்கள் !
மொத்தத்தில் மனதைக் கோயிலாக்கி, மானுடனை கோபுரமாக்குவது 
சித்தவியலின் ஒற்றை வரிக் கொள்கை !
கற்பமும், முப்பூவும் காக்க, காக்க... மனிதனைக் காக்க ! அகல, அகல பிணி, மூப்பூ அகல ! வழிகாட்டி வாழ்ந்து காட்டிய ஞானக் களஞ்சியங்கள் !
தாயிற் சிறந்த தயாவானத் தத்துவங்கள் !

சித்தர் பெருமக்களைப் பற்றிக் கூறுவது எழுதுவது, யானையினைத் தடவிப் பார்த்துத்
தெரிவித்தக் குருடர்களின் கதைதான் !
சித்தர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தெரிவிப்பதற்கு , இவர்கள் சரிதை, சுயசரிதை,
வாழ்க்கை வரலாறு என எதுவும் எழுதிவைக்கவில்லை. 
ஏனெனில் தன்னை மறைத்து வாழ்ந்த ஞானப்பேரரசர்கள், இந்த வாழ்வியல் விஞ்ஞானிகள் !
பூக்கடைக்குப் போர்டு எதற்கு..?
தேனீக்கள் தெரிந்து கொள்ளும், அது போதும் !
அதுதான் விட்டகுறை தொட்டகுறை !

இவர்கள் எழுதிய நூல்கள், பயிற்று வித்த சீடர்களின் நூல்கள், வரலாற்றுத் தடயங்களாய் வாழ்வின் ஒளி விளக்காய் இன்றளவும் நமக்கு வழிகாட்டிவருகின்றன.
சித்தவியல் தத்துவங்கள், உபதேசங்கள் குரு சீடர் பரம்பரையாகவேத் தொடர்ந்து வந்துள்ளன.
குருமார்கள் நேர்முகமாகப் பயிற்றுவிப்பதும், சீடர்கள் அதனை மறையைப் போலப் போற்றிக் காத்துவருவதும் வழக்கமாய் இருந்துள்ளன . 
எப்படி வேதங்கள்  எழுதப்படாமல் காதால் கேட்டே மனம் கொள்வதாக இருந்ததோ அதேபோன்று, சித்தர்களின் உபதேசங்களும் பாடங்களும் மறையைப் போன்று காக்கப்பட்டு வந்துள்ளன. வாய்மொழி, செவிவழி !
இக்குருகுலத் தத்துவமே மெய்ஞானக் கல்வியின் ஆதார பீடம்.
மனதை செம்மையாக்கும் மந்திராலயங்கள்.
அர்ஜுனன் ஆக்கி காண்டீபம் ஏந்த வைக்கும் குரு‌சேத்ரங்கள். 
இம்மெய்க்கல்வியின் ஞானத்தினை இப்போதுள்ள இங்லிஷ் மீடியம் தருமா ?

மிகப் பிற்காலத்தில்தான் சித்தர் பெருமக்களும் அவர்தம் சீடர்களும் தாம் பயின்றதும்,
கற்றதும், கைவந்ததுமான யோகம், மருத்துவ , வாழ்வியல் முறைகளைப் பின் வரும் 
வாழையடி வாழையான சந்ததியினர் பயன் பெறும் வகையில் பனை ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்தனர்.
பல பாடல்களில், “ அகத்தியர் கூறியதை யான் சொன்னேன் ” எனும் வரிகளிலிருந்து இதனை அறியலாம்.

“ சொல்லிடவே தேவிக்குச் சதாசி வன்றான்
          சொல்லவே தேவியும்நந் திக்குச் சொல்ல
நல்லிடவே நந்திதன் வந்தரிக்குச் சொல்ல
         நயமுடன் தன்வந்தரி யசுவனிக்குச் சொல்ல
அல்லிடவே யசுவனியாந் தேவர் தாமும்
        அகத்தியர்க் குரைத்திடவே யம்மு னீந்திரன்
புல்லிடவே புலத்தியர்க் குபதே சிக்க
       புலத்தியரும் தேரையர்க்குப் புகன்றிட் டாரே ”
                             - யூகி முனி வைத்திய சிந்தாமணி

ஆதியில் சித்தர்கள் தோன்றியது புண்ணிய பூமியான இந்த தமிழ் மண்ணில் தான் !
இது தமிழ் பேருலகிற்கு கிடைத்த அரும் பெரும் பேறு !
இவர்கள் இந்த மண்ணையும் மக்களையும் தமிழையும் நேசித்தார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை .
உலகிற்குத் தமிழனை உயர்த்திக் காட்டிய பெருமை, உதாரணம் கூறிய பெருமை இவர்களையே சாரும் .
இவர்களுடைய மந்திரத் தமிழின் மகிமையில் மானுட விஞ்ஞானம் மருண்டு போய் நிற்கிறது.
அவர்கள் வாழுகின்ற மண்ணில் நாமும் வாழுகிறோம், அவர்கள் சுவாசிக்கும் காற்றில்தான் நாம் உயிர் வாழ்கிறோம் என்பதனை அறிந்து கொள்வோமாக !

“  பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
   முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
   என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
   தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
                                                 - திருமந்திரம்

“ தெளியவே மவுனச் சொல் லறிய வேண்டும்
         தியான மந்திர சித்தி மவுனமாலாச்சு
களியவே பொருளெல்லா மவுன மதாலாச்சு
        கருவு குருவுருவுமுதல் மவுனமதாலாச்சு
சளியவே சிவயோக ஞானசித்தி முதல்
        சைதன்னியப் பொருள்களெல்லா மவுனமதாலாச்சு
பொருளியவே பொதியை தெட்சணாயனென்பேர்
       புனித மென்ற தமிழுக்குடையவனுனானே ”
                                - அகத்தியர் சௌமிய சாகரம் 

சித்தர்கள் நவசித்தர்கள், நவநாத சித்தர்கள், நவகோடி சித்தர்கள் என்றெல்லாம் பலவாறாக
நூல்களில் அழைக்கப்படுகின்றனர்.
மொத்தத்தில் இவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கியல் கட்டுக்குள் அவர்களும்,
அறுதியிட்டுக் கூறும் தகுதியோடு நாமும் இல்லை.
சித்தர்கள் கோடிக்கணக்கில் வாழ்கிறார்கள் என்பதும், பூமண்டலம் தவிர 
அண்டங்கள் அனைத்திலும் இவர்கள் சூக்கும வடிவில் நிரவி நிறைந்துள்ளார்கள்
என்பதும் நூல்களிலிருந்து அறியப்படுகின்ற பேருண்மை .

“ வாரப்பா அறுபத்து நாலு மரபுள்ளே
        மகத்தான சீட வர்க்கம் கோடியாயிடிச்சே
சீரப்பா சீடவர்க்கம் சீடர்களைச் சொல்ல
       சிற்றண்டம் பேரண்டம் பரவிச்சப்பா ” 
                                        - போகர் நிகண்டு 

இவர்களுக்கு பல்வேறு பெயர்சூட்டி அகத்தியர் அழைப்பதைக் காணுங்கள் :

“ காணடா கவுனசித்தர் குளிகை சித்தர்
        கண்மணியே கெவுனசித்தர் மௌனசித்தர்
நாணடா ஞானசித்தர் யோகசித்தர்
       நால்வரென்ற ரிஷிகளுடன் முனிவர் தேவர்
வேணடா வேதரிஷி அனந்தமான
       வேதாந்த தவமுனிகள் கோடாகோடி
பாணடா மூலகணபதிதான் கூட
       பரப்பிரம்ம விஷ்ணுருத்திர மயேசன்கூட
கூடான சதாசிவத் தோடாறு பேரும்
      கோடான கோடி சதா கோடி சித்தர் ”
                      - அகத்தியர் ஞான காவியம் 

சித்தவியலின் தோற்றம், தொடர்ச்சி, வளர்ச்சி, பரிணாமம் ஆகியவற்றின் வரைவு இலக்கணங்களுக்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. 
காலத்தினை வென்ற இக்கலைவாணர்களின் வயது, காலக்கணக்கினை, கணித அறிவால் அளவிட இயலாது. 
வான்மண்டலத்தின் கோள்களை அளந்த இந்த ஞானிகளின் வயதை நம்மால் எப்படி கணக்கிட இயலும் ..?
பரிபாஷையால் புரிய வைக்கும் இந்த அறிவுக் களஞ்சியங்களை ஆராதிக்கலாம், 
ஆராய முடியாது. 
இவர்களுடைய காலம் கல்தோன்றி மண்தோன்றாக்காலம் என்று மட்டுமே கூற இயலும்.

“ ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
   ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
   ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
   நானும் இருந்தேன்நற் போதியின் கீழே
                                            - திருமந்திரம்

 “ பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
       பார்தனில் நானிருந்தேன் எத்தனையோ கோடி
ஆரடா என்னைப்போல் அறிவாருண்டோ
      ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானேன் ”
                                                  - காகபுசுண்டர்

“ தானானவவர் பெருமை கோடா கோடியுகங்கள்
           சதாகோடி யுகாந்திரம் வாழ்ந்தார்களையா ”
                                                     - அகத்தியர்

சித்தர்கள் தங்களுடைய வசிப்பிடங்களாகக் காடுகளையும், மலைகளையும் தெரிவு செய்து இயற்கையோடு வாழ்ந்து வந்தனர் . 
அருவி, ஆறு, சுனை, அமைதி, மூலிகை போன்ற இயற்கை வாழ்வியல் அவர்களுடைய 
யோக வாழ்க்கைக்கு  உகந்ததாக அமைந்தன.
மலைக்குகைகளே மருத்துவக்கூடங்கள். 
ஆசிரமங்களே பல்கலைப்பயிலகங்கள்.
இவை இயற்கை அமைத்து அளித்த தத்துவ ஞான பீடங்கள்.
இயற்கையே எல்லாவற்றுக்கும் என்சைக்ளோபீடியா !

சித்தர்களை அறியும் மெய்க்கல்வி பெறுவதற்கு குருவருளும் திருவருளும் துணை செய்யவேண்டும் .
இந்த ஞானக் கல்வி குருநாதரால் வழங்கப்படுகிறது .

மனம் சொலும் மறை
மறை சொலும் பொருள் 
மனித வேடமாய் வந்தது !

இது தெய்வத்துக்கு மட்டுமன்றி குருவுக்கும் பொருந்தும்.
ஓம் எனும் மந்திரம் உபதேசித்த முருகனும், கீதை உபதேசித்த கண்ணனும் இந்த மரபில் வந்த ஞானாசிரியன்கள் !

“ பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்
   டிதமுற்ற பாச இருளைத் துரந்து 
   மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
   திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே ”
                                        - திருமந்திரம்

                                      சித்தர்கள் திருவடிக்கு..!

                                      தரிசனம் தொடரும்..!

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html

No comments:

Post a Comment