தமிழ் முனிவன் தாள் பணிந்து !
ஊழ்வினை ....! (Karmic Forces)
அன்பே சிவம்! (Love is God)
உண்மையே பரம் பொருள்! (Truth is Absolute)
தாயாய் எனக்குத்தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து
குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருளென (ஔவையாரின் விநாயகர் அகவல்)
"ஊழிற் பெறுவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்" என்றுரைப்பது தமிழ்மறை.
"ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்" எனக்கூறுவது சிலப்பதிகாரம்.
அறிவியல் உலகில் நாடு, மொழிகளைக்கடந்து மனிதனால் இன்று பெரிதும் உச்சரிக்கப்படுகின்ற சொல் "கர்மா"; உளவியல் அறிஞர்களின் நீண்ட நெடுந்தொடர் ஆராய்விலும் உள்ளது இப்பொருள். கர்மா, தலைவிதி, விட்டகுறை தொட்டகுறை என்றெல்லாம் பெயரிடப்பட்டு அழைக்கப்படுவது எது ? அதன் செயலாக்கம் மற்றும் வினளவுகள் யாது ? வாழ்க்கையில் மனிதனுக்கும் இதற்கும் உள்ள தொடர்பு என்ன ? விநாயகர் அகவலில், "முன்னை வினையின் முதலைக் களைந்தே" (Capital Fund) என ஔவை குறிப்பிடுவதும் எதனை? இது குறித்து ஒரு சிறிய அகழ்வாராய்வு! ஆழ்கடலில் முத்தெடுக்கும் முயற்சி!
கர்மவினைக் கோட்பாட்டின் (Theory) முகநூல் (Facebook) வெளிப்பாடே சர் ஐசக் நியூட்டனின் மூன்றாவது விதி ஆகும்: "ஒவ்வொரு வினையும் அதற்க்கு நேர் சமமான எதிர் வினையை சந்திக்கின்றன" (For every action, there is an equal and opposite reaction).
"வினை விதைத்தவன், வினை அறுப்பான்"
"முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்" எனும் முன்னோர் பழமொழிகள் மானுட வாழ்வை நெறி படுத்தும் அறிவுரைகள் .
சோதிடவியல், ஜாதகத்தின் 5-ஆம் இடத்தை "பூர்வ புண்ணிய" வீடு என்றும், 10-ஆம் இடத்தை கர்ம வீடு எனவும், 9&10 ஆம் இடங்களின் சேர்க்கையை "தர்மகர்மாதிபதியோகம்" எனக் குறிப்பிடுவதைக் காண்க (முதல் நிலை இராசயோகம்); மற்றும் முன்னுரை வாசகத்தில்,
"ஜனனி ஜென்ம சௌக்கியனாம்
பதவி பூர்வ புண்ணியனாம்" எனத் தொடங்கியே முன்னாளில் ஜாதகங்கள் எழுதப்பட்டு வந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கவையே.
அகத்திய முனிவர் அருளிய "பன்னீராயிரம்" நூலில்,
"என்னவே விட்டகுறை நேர்ந்து தானால்
எழிலான நூல் இதுதான் வாய்க்கும் பாரு" எனக்கூறுவது நினைவில் நிறைந்திருக்கும் உபதேசம். இந்நூலில் உள்ள "விட்டகுறை இருப்பவர்களுக்கு கிட்டுமெனல்" போன்ற பாடல்கள் மனதிற்கு மருந்து! சிந்தனைக்கு விருந்து!
கர்மவினைகளின் கருவியாகிய கிரகங்களைச் செயல் இழக்கச் செய்து, பிரபஞ்ச உலகின் நிர்ணயிக்கப்பட்ட விதியை வென்று காட்டினார் நம் சித்தர் பெருமான் இடைக்காடர். இயற்கையின் அளப்பரிய சக்தி இடைக்காடரிடம் முற்றும் தோற்றுப் போனது என்பது வரலாற்று அதிசயம்!
சிந்தனை செயலாகின்றது (Thought becomes action);
செயல் பழக்கமாகின்றது (Action becomes habit);
பழக்கம் குணங்களாகிறது (Habit becomes character);
குணம் விதியாகின்றது (Character architects destiny);
விதிப்பயனால் சிந்தனைகள் பிறக்கின்றன (Destiny generates thoughts ).
புலனாவது (Sensation), காட்சியாகி (Perception), நினைவாகி (Conception),
கருத்தாகி (Thought impression) , காரியமாகி (Action), இயல்பாகி (Nature),
விதியாகி (Destiny) பதிவுபெறுகின்றது. விதியின் வித்துகள் எண்ணங்கள் !
நிறைவெய்தா செயல்களும் (Incomplete actions), பூர்த்தியடையாத சிந்தனைகளும் (Unfulfilled desires), நம் ஆழ் மனதில் பதிந்து, புதைந்து கர்ம வினைகளாய் மறுபடிப் பிறப்பெடுக்கின்றன (Memory cells). பூர்த்தியாகாது எஞ்சியுள்ள கர்ம வினைகளே உலகிடை மனிதனை மறுபிறப்பெடுக்கச் செய்கின்றன எனக் கொள்ளலாம். விட்டுப்போன வினைகளை பூர்த்தி செய்திடவே இப்பிறப்பு என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வினை உள்ள வரைதான் ஜீவன் உடலுக்குட்பட்டிருக்கின்றது. வினைகளை ஒட்டியே உடலும் உலகிடை வினைக்குத்தகுந்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் செய்கின்ற காரியங்கள் யாவும் கர்ம வினைகளின் இயக்கமே அன்றி நம்முடைய புத்திசாலித் தனமன்று என்பது உணரப்படவேண்டிய உண்மையாகும் !
தன்னை வினையாற்ற வைக்கும் சக்தியின் இருப்பிடத்தினை (Governing center) அருணகிரிநாதர் வாக்கில் காண்போம்:
"யானோ, மனமோ, எனையாண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே" (கந்தரனுபூதி).
மனிதனை ஆட்டிப்படைக்கும் கிரகங்கள் கர்மவினைகளின் கருவிகள். முன்னர் கூறப்பட்ட சிந்தனை-செயல்-பழக்கம்-குணம் விதி யெனும் கர்மவினை வளையத்திற்குள் (Karmic circle) சிக்கி சிறைப்படும் மனிதன், கர்ம வினைகளின் கருவியாகிய கிரகங்களின் கைப்பிள்ளை ஆகி விடுகின்றான். ஓய்வின்றி சதா சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களின் ஆதிக்கத்தில் வாழுகின்ற மனிதனுக்கு, மனதில் எப்படி அமைதி(Inner peace) நிலவும்? சிந்தனைக்கு..! காலமெல்லாம் அமைதியின்றி உழன்று தவித்து, கர்ம வினைகளின் கைதியாகவே கடைசியில் மாண்டுபோகின்றான். வெந்ததைத் தின்று, விதி முடிந்தபோது இறப்பதற்கா பிறந்தோம்...?
நாணப்பா தேவதையைப் பணிந்திட்டாலும்
நதிகளெல்லாம் தேடிப்போய் முழுகினாலும்
ஊணப்பா உள்வீட்டுக் குள்ளிருக்கும்
ஓளிவுள்ள வஸ்துவைக் காண்பரிதுகாணே ( சுப்பிரமணியர் ஞானம் 200 ).
தானே கட்டிய மனச்சிறையினுள், தானே பூட்டிக்கொண்ட அடிமை விலங்கோடு, காலமெல்லாம் கைதியாகவே வாழ்ந்து முடிக்கின்ற மனிதனுக்குத் தெய்வ வடிவாகிய குரு காட்சி தந்து, கருணையுடன் சிறைக்கதவினை திறந்து விடுகிறார். ஆனால் சிறைக்கும் விலங்கிற்கும் பழகி, அடிமைத்தனத்திற்கு ஆளாகிப்போன மனித மனம், இருப்பதை இழப்பதற்கு தவிக்கின்றது (Fear of losing the known). மனதால் முடங்கிய மாற்றுத் திறனாளியாகவே கடைசிவரை காட்சி அளிக்கின்றான்! (Mentally handicapped & psychologically crippled)
பொன்னாக இருந்தாலும் விலங்கு விலங்குதானே, பளிங்காக இருந்தாலும் சிறை சிறைதானே!
பெற்றவள் உடல் சலித்து, பேதை மனிதன் கால் சலித்து, படைத்தவனும் கை சலித்து ஓய்ந்தான்; இனி பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன், என ஆத்மா சூளுரைத்து, சுதந்திர தாகம் கொள்கிறது...
மனிதன் எங்கிருந்து, எப்படி, எதற்காக உலகிடைத் தோன்றினானோ அதனை நிறைவேற்றி, கர்ம வினைகளின் தொடர்பு ஒழித்த பின்னரே, அண்ட அருள் வெளியில் இரண்டறக் கலக்கின்றான்.
"துரியமும் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு" ( ஔவைக் குறள் )
தன்னை அறிவதே தவம்; தன்னை உணர்வதே தியானம்.
வெளியில் தேடுவது விஞ்ஞானம்; உள்ளே தேடுவது மெய்ஞானம்.
"உன்னை நீ அறிந்தாயாகில்
உனக்கொரு கேடுமில்லை" (கைவல்ய நவநீதம்) எனும் கூற்றுக்கிணங்க, மனிதன் எப்போது தன்னை உற்று நோக்கி, தனக்குள் விடை தேடுகிறானோ அப்போது தான், இதுகாறும் தான் கர்மவினைகளின் கைப்பாவையாக, கிரகங்களின் கைதியாகத் தேம்பித் திரிந்ததை உணரத்துவங்குகின்றான். அவற்றின் பிடியிலிருந்து விடுபட, காண்டீபத்தை கையில் ஏந்தி வெற்றி வேள்வியைத் துவங்குகின்றான். அதன் பயனாக வாழ்வில் "இறவாநிலை"யடையும் அழியாப் பெருஞ்செல்வமாகிய மெய்யறிவினைப் பெறுகின்றான் .
மெய்யறிவினால் அண்டத்தை அறிகிறான்;
அண்டத்தினுள் தன்னைக் காண்கின்றான்;
தன்னை உணர்வதால் தலைவனை அறிகின்றான்;
தலைவனை அறிந்து தத்துவநிலை எய்துகிறான்.
உண்மைப் பரம்பொருளை (Absolute Truth) உணர்ந்து செயலாற்றின், உடலை நீத்து இறவாநிலையினை (Art of deathlessness) அடையலாம் எனும் பேருண்மையினை சித்தர் பெருமக்கள் அறிந்து , நமக்கும் உணர்த்தினர். ஆனால் அவர்தம் அறிவுரைகளைப் பின்பற்றாமலும், பேருண்மைத் தத்துவங்களை உணரத் தெரியாமலும் அவர்களிடமிருந்து நெடுந்தூரம் விலகிப்போய், வழிதவறிய வாழ்க்கையில், திசை மாறிய பயணம் !
"சாகாது இருப்பதற்குத் தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கன்மனமே" (இடைக்காடர்). மானுட வாழ்வை மேம்பட வைக்கும் உன்னதமான உபதேசம்!
மனிதன் தோன்றின காலமுதல், நாளொரு வண்ணமாய் உயர்ந்து கொண்டே இருக்கின்றான். அறிவியல் ஆற்றலாலும், தொழில் நுட்பத் திறமையினாலும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொண்டான்.
விண்ணில் பறவைகளைப் போல் பறக்கின்றான் ;
கடலில் மீன்களைப்போல் நீந்துகின்றான்; ஆனால்
மண்ணில் மனிதனாக வாழ மட்டும் இன்றுவரை அறிந்தானில்லை !
நான், எனது, எனக்கு, எனது தான் உண்மை, மற்றவை எல்லாம் பொய் எனும் மன மாயையில் வாழ்ந்த நீ வாழ்வின் இறுதியில் கண்டது என்ன ?
பொருளை தேடினாய்; அருளை இழந்தாய் !
அறிவியலை படித்தாய்; ஆரோக்கியத்தை இழந்தாய் !
நிலபுலன் வாங்கினாய்; நிம்மதியை தொலைத்தாய் !
வசதிகளை பெருக்கினாய்; வாழ்க்கையை இழந்தாய் !
அன்னநடை கற்கப்போய், தன்நடை மறந்தாய் !
மெய்ப்பொருளினை அறிந்திடும் திறனில்லாது, பொய்ப்பொருளை பூஜித்து போலியான வாழ்க்கை- பிறவிச் சூழலில் சிக்கி பேரானந்த பெருவாழ்வினை இழந்ததுதான் இறுதியில் கண்ட பயன். பொன்னைத் தேடும் பூமியிலே தன்னைத் தேடித் தவிக்கின்றான் !விண்ணைத்தேடும் அறிவியலும் தன்னைத் தேடித் தானே முடிகின்றது!
விதி மதி விளையாட்டின் விளக்கமே மனிதன் ! மனிதனால் விதியினை வெல்லமுடியுமா ? கர்ம வினைப்பயன்களை எவ்வாறுதான் எதிர்கொள்வது ? காண்போம்:
வினைப்பயன்களை சந்தித்து எதிர்கொள்வதில்,
i) முதல் வகை மனிதன் செய்வதறியாது பணிந்து ஏற்றுக் கொண்டு சரணடைந்து விடுகிறான்.
ii) இரண்டாம் வகை அதனைத் தவிர்க்கவும், தள்ளிப்போடவும் முயற்சிக்கின்றான் .
iii) மூன்றாம் வகை மட்டுமே அதனை எதிர்வினையின்றி, அமைதியுடனும் விழிப்புணர்வோடும் உற்று நோக்குகிறான். இவனே விதியின் வினை இயல்பை புரிந்து வெல்லும் தகுதியினைப் பெறுகிறான் ; ஞானவீரனாகின்றான் !
வினைகள் ஒழிய பூஜை பரிகாரங்கள் செய்தால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும் எனும் மயக்க வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாறவேண்டாம். இத்தகைய பரிகாரங்கள் செய்வதினால், கர்ம வினைகளை அணு அளவும் மாற்றியமைக்க இறைவனாலும் இயலாது என்பதனை தெளிவாக உணர்வோமாக!
பஞ்சைப்போட்டு நெருப்பை மறைப்பவன்
பைத்தியக்காரனடா !
பாவம் தீர்க்க பணத்தை இறைப்பவன்
பச்சை மடையனடா !
நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன்
நிச்சயம் மிருகமடா !
நல்லநேர்மையிலும் தன் வேர்வையிலும்
தினம் வாழ்பவன் தெய்வமடா! எனும் திரைப்பட பாடல் வரிகள் 'சுள்'ளென்ற வார்த்தைகளில் சொல்லப்பட்ட அறிவுரைகள் ! (கண்ணதாசன்)
பின் பிறவித்துன்பங்களிலிருந்து விடுபட என்னதான் வழி?
"தன்நோய்க்குத் தானே மருந்து".
அந்த மருந்து இருக்குமிடத்தினை உணர்த்தித் தொட்டுக்காட்டும் குரு வேண்டும் . அவர் தெய்வத்தால் காட்டி உணர்த்தப் படுகிறவர்.
"பார்த்த இடமெல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு
வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே" (தாயுமானவர்)
என்பதற்கிணங்க, சகல தோற்றங்களையும் ஊடுறுவிப் பார்க்கக்கூடிய அஞ்சனக்கண் (x-Ray) போன்ற கண்ணொளி நிறைந்த முழு மெய் ஞானியை நாம் ஆசானாகக் கொள்ளல் வேண்டும். அவரே முன்னை வினையின் முடிச்சினை அவிழ்த்து பின்னை வினையின் பிடரியை பிசையும் அனுபூதிச் செல்வர் ! இத்தகைய ஆன்றோருக்கு இயற்கையும் பணிந்து ஏவல் செய்யும் !
ஆத்ம ஞானம் தேடி அனுபூதி அடைந்த விதம், அனுபவ அறிவுரையாகப் பிறந்ததைக் காண்போம் :
"வறுமைபோ லுண்டுடுத்துஉப ரசத்தைத் தேடு
மகத்தான யோகிகளைக் கண்டு பேசு
நெறிமையாய் அவருடனே வாரத்தை பேசு
நினைவழிந்து போகாமல்உப ரசத்தைக் கேளு
வெறுமைபோற் சீவனத்துக் கிடத்தைக் கேளு
வேதாந்த நுட்பத்தின் விபரங் கேளு
திறமையாய் மலைதனிலே சஞ்ச ரித்துச்
சூதத்தின் சாரணைக்கு விபரங் கேளே" (போகர் நிகண்டு பா. 292).
உண்மைச் சீடன் குருவிடம் எவ்வாறு ஒழுகினால் குரு, சீடனுக்கு பல உண்மைகளைக் கூறியும், காட்டியும், பயிற்றுவித்தும் உதவுவாரென்பதைப் போகர் தம் நிகண்டென்னும் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.
"நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிரிவற்றிருக்கும் சிவம்" ( ஔவைக் குறள் )
"பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே" என்பது திருமூலர் திரு மொழி.
"கொள்ளை பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் " (பட்டினத்தார்)
குருவடி பணிந்து கொள்வன கொள்க ! நூல்களில் எழுதியிருப்பவை ஆதியை அறிவிப்பதற்கே. மற்றவையாவும் ரகசியமாகவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை குருமுகமாக மட்டுமே அறியமுடியும். அதற்கு கடவுளின் கருணையும் குருவின் திருவருளும் இன்றியமையாதன என்பதை உணர்வோமாக.
கர்ம வினைகளினின்று விடுபடுதற்கு மனிதன் இயற்கையைப் போற்றிப் புரிதல் வேண்டும்; இயற்கையினுடைய மௌன மொழியைக் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் .
தந்தையே இறைவன், தாயே இயற்கை ; இடையில் இன்னொருவர் எதற்கு?
சுமந்த பூமியும் ,
தாகந்தீர்த்த தண்ணீரும் ,
பசிபோக்கிய உணவும் ,
நலமளித்த இயற்கையும்,
நீ எனக்கு என்ன செய்தாய் ? என்று கேட்டால் நம்முடைய பதில் என்ன ?
தாது மணல் கொள்ளை,
ஆற்றுமணல் விற்பனை,
சோறு போட்ட நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்குவது ,
மரங்களை வெட்டி விற்று காடுளை அழிப்பது, - என்பது தானே நமது பதில் !?
ஏன் இந்த நிலை? யார் இதற்க்கு பொறுப்பு ?
உள்ளமைதி இல்லாது, உலகமைதி வராது;
உள்ளொற்றுமை இல்லாது, உலகொற்றுமை இயலாது;
உள்ளுண்மை விளங்காது, தெள்ளறிவு எட்டாது ! எனும் பேருண்மையை நெஞ்சில் நிறுத்திக் கொள்வீர்.
அண்ட அருள் பெருவெளியைப் போற்றி பூஜித்து,
என் மூச்சு உன் மூச்சு, என் பேச்சு உன் பேச்சு, என் பார்வை உன் பார்வை,
என் பணி உன் பணி, என் மனம் உன் மனம், என்னுடல் உன்னுடல், என்னுயிர் உன்னுயிராகி, நானற்று நீயாகவருள் !
பார்வை நான், பார்ப்பவன் நீ;
நா நான், சுவை நீ ;
என்று நீ, அன்று நான் , எனத் தாய்த்தமிழில் தொழுது, வாயினால் பாடி மனதினால் சிந்திக்க , வினை வளையத்தினின்று விடுபட்டு ஆத்மா விடுதலை பெரும் . தான் என்ற அகந்தையைத் தகர்த்தெறிதலே இதன் உட்கருத்து என்பதை உணர்வீர்களாக. அனைவருக்கும் குருவருள் திருவருளாய்ப் பெருகும் !
அன்பு நிலவட்டும் ! அறம் தழைக்கட்டும் ! அருள் பெருகட்டும் ! அமைதி மலரட்டும் !
அறிவு ஒளிரட்டும் ! ஆற்றல் ஓங்கட்டும் !
ஒன்றுபட்டு சிந்திப்போம் ! சிந்தனை சித்திக்க வாழ்த்துக்கள் !!
விதியை வென்ற வித்தகச் சித்தர் கணங்களின் திருவடிகளைப் போற்றித் தொழுவோமாக !
ஊழினை உப்பக்கம் கண்ட உத்தமசீலர்களாகிய சித்தர்களுக்கு சமர்ப்பணம்!
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா (கண்ணதாசன்) .
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
No comments:
Post a Comment