Wednesday, 18 April 2018

தமிழ்ச் சங்கங்களின் வரலாறு (History Of Tamil Sangam)

                                                  தமிழ் முனிவன் தாள் பணிந்து !

                          தமிழ்ச் சங்கங்களின் வரலாறு (History Of Ancient Tamil Sangam)

             அகரத்தினின்று அனைத்து உயிரினங்களும் தோன்றி, பல்கிப்பெருகி வளர்ந்தன. 
உலகிலேயே சங்கம் நிறுவி, தொண்டுகள் செய்து, நனிநாகரிகம் நல்கி, உயர்ந்தோங்கிய மொழி 
நம் தாய்மொழி என்பதில், என்றும் நமக்கு பெருமையே. 
நாடு நலம் பெறுதற்கு முதலில் மொழி வளம் பெறவேண்டும்.

       "சங்கத்தமிழ் மூன்றுந் தா" (ஔவையார்)

       "சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே" (ஆண்டாள்)
எனும் பாடல் வரிகள், தமிழ்ச்சங்கங்கள் நிறுவித் தமிழ் வளர்த்த வரலாற்றினை தெளிவாகத் தெரிவிக்கின்றன. 

.கி.மு 16,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சங்கங்கள் செயல்பட்டு வந்தமை, "இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடையவர்" என்று தமிழ் மக்களைப்பற்றி அகத்தியர் பரமேச்சுரனிடம் கூறுவதிலிருந்து அறிகிறோம். 

     "திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
       விண்ணோடும் உடுக்களோடும்       மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்" (பாரதிதாசன்) பிறந்த நாம், அறிவியல், ஆன்மீகம், கல்வி மற்றும் நாகரிகம் மட்டுமல்ல, அறநெறி வாழ்ந்து அவற்றை அவனிக்கு கற்றுக் கொடுப்பதிலும் முன்னோடியே !

மேலைநாடுகள், குழந்தைகளுக்கு "A" for "apple" எனக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது, தனது பிஞ்சு குழந்தைகளுக்கு,

      "அ"  என்பதற்கு "அறஞ்செய்ய விரும்பு" 
      "ஆ"  என்பதற்கு "ஆறுவது சினம்" 
என்று எழுத்துக்களோடு அறநெறிகளையும் சேர்த்து ஊட்டிய நம் பாட்டிக்கு, நாம் எவ்வாறு கைமாறு செய்யப் போகிறோம் ? என்பது அனைவரின் சிந்தனைக்கு !  

கிடைத்த கல்வெட்டுகள், சாசனங்கள், இலக்கியச்சான்றுகள், மேநாட்டறிஞர்களின் ஆய்வுக்குறிப்புகளிலிருந்து, 14 தமிழ்ச்சங்கங்கள்  நிறுவி நடைபெற்று வந்த விபரங்கள் தெரியவருகின்றன. (இதனை வாசிக்கும் போது உங்களுக்கு ஏற்படுகின்ற வியப்பு எனக்கும் முதலில் ஏற்பட்டது). அவற்றின் விபரங்கள் சுருக்கமாகத் தொகுத்து கீழே தரப்பட்டுள்ளன. மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தமிழ்ச் சங்கங்களின் வரலாறு அனைவர்க்கும் தெரிய வேண்டும் என்பதே இதன் நோக்கம் !

                                                        முதல் தமிழ்ச்சங்கம் 
                                                     (உருவ எழுத்துக்காலம்)

1. காலம் : கி.மு 30,000 முதல் கி.மு 16,500 வரை.

2. இடம் : பஃறுளியாற்றின் கரையில் இருந்த தென்மதுரை என்னும் நகரம். 

3. நிறுவிய அரசர் : பாண்டிய மன்னன் நெடியோன் (மாகீர்த்தி). 

4. புலவர்கள் : நிறுவிய அரசர் முதலானோர். 

                                                                 வரலாறு

       கி.மு  30,000 லேயே தமிழ் நாடானது நாகரிகத்திலும், அரசியலிலும், மொழி வளர்ச்சியிலும், முத்துக்குளித்தல் (Pearl Industry) மற்றும் கனிமத்தொழிலிலும் (Mining Industry) சிறந்து விளங்கியுள்ளது. கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ் நாடு இமயம் முதல் குமரி காண்டம் வரை சேர்ந்த பரப்பளவினைக் கொண்டதாகும்.


                                               2. மகேந்திர மலைத் தமிழ்ச்சங்கம் 
                                                       (உருவ எழுத்துக்காலம்)

1. காலம் : கி.மு 16,000 முதல் கி.மு 14,550 வரை.

2. இடம் : குமரிகண்டத்து ஏழ்குன்ற நாட்டின் மகேந்திரமலை.

3. நிறுவியவர்: இறையனார் என்னும் திரிபுரம் எரித்த விரிசடைப்பெருமான். (பரமேச்சுரன்). 

4. புலவர்கள் : 1. திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான், 2. பொதிகை மலை அகத்தியர் முதலானோர். 

5. நூல்கள் : 1. மகேச சூத்திரம், 2. இறையனார் களவியல் என்னும் ஐந்திணை அகநூல். 

                                                               வரலாறு

     மறைந்த மொகஞ்சோதரா, அரப்பா நாகரிகங்கள் எல்லாம் இக்காலத்தில் எற்பட்டவையே.
மகேந்திர மலைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் நான்மறைகளும், தமிழ் ஒன்பது ஆகமங்களும், தமிழ்    
ஆறு அங்க நூல்களும், இன்னும் பல நூல்களும் வெளியிடப்பட்டன. 


                                               3. பொதிகை மலைத் தமிழ்ச்சங்கம் 
                          (உருவ எழுத்துக்காலம் தொடங்கி சதுர எழுத்துக்காலம் வரை)

1. காலம் : கி.மு 16,000 முதல் 

2. இடம் : பொதிகைமலையின் பாபநாசம். 

3. நிறுவியவர் : பொதிகைமலையின் அகத்தியர். 

4. புலவர்கள் : அகத்தியர் மற்றும் அவர் மாணாக்கர்கள்; பாண்டிய அரசர்களில் பலர். 

5. நூல்கள் : அகத்தியம். 

                                                                வரலாறு

        அகத்தியர் மகேந்திர மலைத் தமிழ்ச்சங்கத்திலும் அங்கம் வகித்து, பொதிகைமலையில் தாம் நிறுவிய தமிழ்ச்சங்கத்தினையும் வளர்த்து வந்தார். சேர, சோழ, பாண்டிய அரசர்களும், அரச குடும்பத்தாரும் அங்கம் வகித்து தமிழ் வளர்த்தனர். வான்மீகி இராமாயணத்தில் பொதிகைமலை அகத்தியர் பற்றியும், அவர் நிறுவிய தமிழ்ச்சங்கம் பற்றியும் கூறப்பட்டுள்ளது 


                                                      4. மணி மலைத் தமிழ்ச்சங்கம் 
                                           
1. காலம் : கி.மு 14550 முதல் கி.மு 14490 வரை. 

2. இடம் : மணிமலை. (மகேந்திர மலைக்கு தெற்கே இருந்தது.) 

3. நிறுவியவர் : திரிபுரம் எரித்த பரமேச்சுரன் குடிவழி வந்த ஒளிச் செங்கோ எனும் பேரரசன்.

4. புலவர்கள் : 1. சக்கரன் (சங்கத் தலைவன்), 2. பேராற்று நெடுந்துறையன், 
                        3. இடைகழிச் செங்கோடன், 4. தனியூர்ச் சேர்ந்தன்.

5. நூல்கள் : 1. நெடுந்துறையன் பெருநூல், 2. இடைகழிச் செங்கோடன் இயல் நூல்,
                    3. தனியூர்ச் சேந்தனின் செங்கோன் தரைச்செலவு முதலியன.


                                              5. குன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச்சங்கம் 

1. காலம் : கி.மு 14058 முதல் கி.மு 14,004 வரை. 

2. இடம் : திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்) .

3. நிறுவியவர் :  குன்றம் எறிந்த குமரவேள்.

4. புலவர்கள் : 1. குன்றம் எறிந்த குமரவேள் (தலைவர்), 2. வாதாபி அகத்தியர், 3. புலத்தியர், 
                       4. சனகர் மற்றும் சனற்குமாரர் முதலியோர்.

5. நூல்கள் : 1. குமரம் என்னும் பேரிலக்கணநூல், 2. முருகன் அகப்பொருள் விருத்தி, 
                     3. மகேசம், 4. களவியல் என்னும் ஐந்திணை அகநூல்,
                     5. நெடுந்துறையன் பெருநூல், 6. செங்கோடன் இயநூல், 
                     7. (வாதாபி)அகத்தியம் முதலியன. 

                                                                6. தலைச்சங்கம் 
                                                 
1. காலம் : கி.மு 14004 முதல் கி.மு 9564 வரை. 

2. இடம் : குமரி ஆற்றங்கரையில் இருந்த தென்மதுரை.

3. நிறுவியவர்கள் : காய்சின வழுதி முதல் முதலாம் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள்.

4. புலவர்கள் : 4449 பேர்.  1. இறையனார், 2. குன்றம் எறிந்த குமரவேள்,
                       3. நிதியின் கிழவர், 4. முரிஞ்சியூர் முடிநாகராயர், 
                       5. வாதாபி அகத்தியர் (தலைவர்) முதலானோர்.

5. நூல்கள் : 1. வாதாபி அகத்தியம், 2. பெரும் பரிபாடல், 3. முதுநாரை, 4. முதுகுருகு, 
                     5. கதிபெறச் செய்யும் களரியாவிரை. 

                                                                வரலாறு

         தலைச்சங்க நூல்கள் நமக்குக் கிட்டாததற்குக் காரணம் அச்சங்கத்து இறுதிக்காலத்தில்
 (கி.மு 9564 இல்) ஏற்பட்ட பெரும் பிரளயமே.
ஆதியூழியில் குமரிநாடு அழிவுற்றபோது, நாட்டின் ஒரு பகுதியான நக்கவாரத்தீவு (Nicobar Islands) அழியாமல் இன்றும் இருக்கிறது.

                                                
                                                     7. முதுகுடுமித் தமிழ்ச்சங்கம் 
  
1. காலம் : கி.மு 7500 முதல் கி.மு 6900 வரை.

2. இடம் : கொற்கை.

3. நிறுவியவர்கள் : பல்யாகசாலை, முதுகுடுமிப் பெருவழுதி. 

4. புலவர்கள் : 1. இந்திரனார், 2. காரிகிழார், 3. நெடும்பல்லியத்தனார், 4. நெடும்பல்லியத்தை,
                       5. நெட்டிமையார், 6. பரதமுனிவர், 7. புரோகித அகத்தியர்.

5. நூல்கள் : 1. ஐந்திரம், 2. பரதம், 3. கூத்துநூல் முதலியன.

                                                                  வரலாறு

        தலைச்சங்கம் அழிந்தபின் சிலநூறு ஆண்டுகள் சேர-சோழ-பாண்டியர்கள் ஒற்றுமையின்றி, வலிகுன்றி இருந்தனர். தமிழ் வளர்ச்சியும் தேக்கமுற்று வளங்குன்றி இருந்தது.

                                                8. இடைச்சங்கம் (கபாடபுரத்தமிழ்சங்கம்) 

1. காலம் : கி.மு 6805 முதல் கி.மு 3105 வரை.

2. இடம் : பொருநை(தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கபாடபுரம்.

3. நிறுவியவர்கள் : வெண்டேர்ச் செழியன் முதல் முதலாம் முடத்திருமாறன் ஈறாக     
                              எழுபத்தொன்பது பாண்டிய மன்னர்கள். 

4. புலவர்கள் : பொதிகை அகத்தியன் முதல் வெள்ளூர் காப்பியனார் ஈறாக முப்பத்தெட்டு புலவர்கள்.

5. நூல்கள் : 1. பெருங்கலி, 2. குருகு, 3. வெண்டாளி, 4. வியாழமாலை, 5. மாபுராணம், 6. பூதபுராணம்,
                     7. இசை நுணுக்கம், 8. தொல்காப்பியம், 9. பன்னிரு படலம் முதலியன.

                                                                   வரலாறு

           கபாடபுரத்தமிழ்சங்கத்தில் பல ஆரியர்கள் சேர்ந்து, படித்து, தமிழ்ப்புலவர்களாய்த் தேறி, அச்சங்கத்திலேயே உறுப்பினர்களாகவும் இருந்தனர்

                               9. திருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச்சங்கம் 

1. காலம் : கி.மு 1915 முதல் கி.மு 1715 வரை

2. இடம் : திருப்பரங்குன்றம் பக்கமிருந்த தென்மதுரை. ( இது இப்போதுள்ள கூடல் என்னும் தென்மதுரை கட்டப்படுவதற்கு முன் இருந்த நகர் ஆகும் .)

3. நிறுவியவர்கள் : 1. இரண்டாம் முடத்திருமாறன், 2. பொற்கைப் பாண்டியன்,
                               3. குறுவழுதி (இவன் ஒரு சிறந்தபுலவன்.), 
                               4. பாண்டியன் மாறன் வழுதி (இவனும் ஒரு புலவன்.), 
                               5. மூன்றாம் முடத்திருமாறன் முதலியோர். 

4. புலவர்கள் : 1. பாண்டியன் குறுவழுதி, 2. பாண்டியன் மாறன் வழுதி, 3. மூன்றாம்                
                        முடத்திருமாறன் உள்ளிட்ட முப்பத்தாறு புலவர்கள். 

5. நூல்கள் : 1. பெருந்தேவனார் பாரதம், 2. எட்டுத்தொகை நூற்களில் கண்ட சில பாடல்கள்      
                     கொண்ட நூல்கள், 3. பேரகத்தியம், 4. சிற்றகத்தியம் முதலியன. 

                                                     வரலாறு
         பல தமிழ்ச்சங்கங்கள் கடல் கோள்களால் அழிந்து அவதியுற்றதால், இச்சங்கத்தை நிறுவிட சித்தர் ஒருவர் வரைபடம் அளித்து அதன் வண்ணம், மூன்றாம் முடத்திருமாறன் நிறுவி நாட்டினான் எனக்கூறுவர். 

                                                             10. கடைச்சங்கம் 

1. காலம் : கி.மு 1715 முதல் கி.பி 235 வரை

2. இடம் : நான்மாடக்கூடல் என்கிற மதுரை (ஆலவாய்). 

3. நிறுவியவர்கள்: பாண்டிய மன்னன் மூன்றாம் முடத்திருமாறன் முதல் இரண்டாம் உக்கிரப்    
                             பெருவழுதி வரை நாற்பத்தொன்பது பேர்.

4. புலவர்வர்கள் : நானூற்றுத் நாற்பத்து நான்கு (444) பேர். 

5. நூல்கள் : 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநர் ஆற்றுப்படை, 3. சிறுபாண் ஆற்றுப்படை 
                    4. பெரும்பாண் ஆற்றுப்படை, 5. பட்டினப்பாலை, 6. முல்லைப்பாட்டு 
                    7. மதுரைக்காஞ்சி, 8. நெடுநல்வாடை, 9. குறிஞ்சிப்பாட்டு, 10. மலைபடுகடாம் 

                                               11. வச்சிரநந்தி தமிழ்ச்சங்கம் 

1. காலம் : கி.பி 470 முதல் கி.பி 520 வரை . 

2. இடம் : திருப்பரங்குன்றத்துத் தென்மதுரை .

3. நிறுவியவர் : வச்சிரநந்தி எனும் சமணமதத் தலைவர். 

4. புலவர்கள் : 1. இரண்டாம் நக்கீரர், 2. இரண்டாம் கபிலர், 3. இரண்டாம் பரணர்,                                     
                       4. இரண்டாம் கல்லாடர், 5. மூன்றாம் பெருந்தேவனார், 6. நான்காம் பெருந்தேவனார்.

5. நூல்கள் : 1. அந்தாதி, 2. திருமறம், 3. இரட்டை மணிமாலை, 4. திருவிரட்டை மணிமாலை,
                     5. சிவபெருமான் திருவந்தாதி. 

                                               12. மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் 

1. காலம் : கி.பி 1901 முதல்

2. இடம் : நான்மாடக்கூடல் என்னும் மதுரை.

3. நிறுவியவர் : திரு பொ. பாண்டித்துரைத் தேவர்.

4. புலவர்கள் : திரு. உ.வே.சா முதல் 251 பேர்கள்.

5. நூல்கள் : நன்னூல், வீரசோழியம் இன்னும் பிற

                             
                                                    13. கோவைத் தமிழ்ச்சங்கம் 

  கி.பி 1915 ஆம் ஆண்டுக்கு முன்னரே கோவையில், பண்டிதர் திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களால்
நிலை நாட்டப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

                                                    14. கரந்தைத் தமிழ்ச்சங்கம் 

  இச்சங்கமானது தஞ்சை அடுத்த கருந்தட்டாங்குடியில் (கரந்தை) கி.பி 1911ல் 
திரு வே. இராதாகிருட்டினப் பிள்ளை அவர்களால் ஏற்படுத்தப்பட்டு திரு த.வே. உமாமகேசுரம் பிள்ளை அவர்களால் வளர்க்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

                                                 15. உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை 

  உலகமெங்கும் உள்ள அனைத்துத் தமிழ்மொழி அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் சீரிய நோக்கில், "உலகத் தமிழ்ச்சங்கம்" மறைந்த முதல்வர் மாண்புமிகு M.G.R அவர்களால், 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாளன்று, மதுரையில் தோற்றுவித்து தொடங்கப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார் முன்னிலை வகித்தனர்.

இதுவரை ஆறு நூல்கள் இச்சங்கத்தின் வாயிலாக பதிப்பித்து வெளியிடப் பெற்றுள்ளமை அறியலாகின்றது.

முன்னர் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றுக் கூறுகள் யாவும், திருநெல்வேலித் 
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடான "தமிழ்ச் சங்கங்களின் வரலாறு" எனும் நூலில் இருந்து திரட்டப் பட்டவையே. வாழ்க அவர்தம் தமிழ்த் தொண்டு! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பது உண்மை. 

தொன்மையும், செறிந்த வளமும், தெய்வ சக்தியும் நிறைந்த நம் தாய் மொழிக்கு சங்கங்கள் நிறுவித் தொண்டுகள் செய்த சான்றோர் பெருமக்களை போற்றுவோமாக. அவர் வழி நின்று இத்தொண்டினை தொடர்வது நம் ஒவ்வொருவரின் கடமை அன்றோ? மொழி தேய்வுற்ற எந்த இனமும் நீடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை என்பதை உணர்வீர்களாக ! 

"நான் ஒரு தமிழ் மாணாக்கன்" என அறிவித்து கல்லரையில் எழுதச்செய்த மேனாட்டறிஞர் ஜி.யு. போப் பெருமகனாரின் மதிநுட்பமும், மனத்திட்பமும், நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்?

கனவுகளோடும் நினைவுகளோடும்  காலமெல்லாம் வாழும் இன்றைய மனிதன் "கர்ம"வினைகளின்(Karmic forces) கைப்பாவை! 
தானே தனக்குப் பகையாகி, தன்னை அறியத்தடுக்கும் திரையாகி, வீணே திரியும் மனிதனுக்கு அந்த திரையினை விலக்கி, பரம்பொருளை விளங்க வைப்பவர் தெய்வவடிவான குரு. 

நினைவு நெறிப்படவும், நெருங்கின பொருள் கைப்படவும், திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும். இதனை அருளுபவர் அனுபூதி நிறைந்த சற்குரு. ஜோதிடமும் இதனை உறுதிப் படுத்துகின்றது. 
குரு வாய்த்தாலன்றி அமைதியற்று, அலைந்து, திரிந்து வீணாகும் வாழ்க்கை என்பதில் ஐயமில்லை. 

"உள்ளத்திலே இருப்பதுதான் உலகம்" (You are the World). இதனைத் தொட்டு உணர்த்திக் காட்டுபவர் குரு. 

குறிசொல்லி, மந்திரவாதம் செய்து, மாயாஜாலங்கள் காட்டுபவரல்லர் குரு. ஆத்மாவோடு பேசும் அனுபூதிசீலர் !

குரு தன்னை ஆட்கொண்ட விதத்தை மாணிக்கவாசகர் தெரிவிக்கிறார் :
    " பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் மாறும்வண்ணஞ்
      சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட 
      அத்தன் எனக்கு அருளியவா றார்பெறுவார் அச்சோவே." (எட்டாம் திருமுறை)

      "கொள்ளை பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம் " (பட்டினத்தார்)

 அதற்கானத் தகுதிகளை வளர்த்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதனை உள்ளூர உணர்ந்தால், கதவை திறப்பதற்கான சாவி நமக்கு கிடைக்கும். அதை கையில் வைத்திருப்பவர் குரு !
(When the disciple becomes fit, the Guru appears).

     "கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெல்லாங் கண்டேன்"  என வள்ளலார் கூறுவதைக்கவனிக்கவும்.

     " இங்கிவனை நான் பெறவே
        என்ன தவம் செய்து விட்டேன் " (கண்ணதாசன்)

பஞ்சபூதங்களால் வடிவமைக்கப் பட்டுள்ள மனிதன் இயற்கை வளங்களை அழிப்பது தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்குச் சமம்.

"இயற்கையே இறை"; "இறையில் இயற்கை" ! இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பதே மெய்யான இறைவழிபாடு ! எனக் கூறுகிறது "சிறுபஞ்சமூலம்" எனும் பழந்தமிழ் நூல்.

ஆறுகளை இழந்தோம், காடுகளை இழக்கின்றோம், நாளை தண்ணீருக்குக் கையேந்தி நிற்கவா..? 
வயல் வெளிகளையும் இழந்தால், நாளை வயிற்றுக்கு என்ன செய்யப்போகிறோம் ? 

     நாம் உயிர் வாழ,
             சுவாசிப்பதற்கு எரிவாயும்
             தாகத்திற்குப் பெட்ரோலும்
             வயிற்றுப்பசிக்கு ஹைட்ரோகார்பனும்
             சிற்றுண்டிக்கு மீத்தேனும் பயன்படுமா ? என்பது உங்கள் சிந்தனைக்கு...
மாசுபட்டுள்ள நிலத்தடி நீர் இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை ! அபாயத்தின் அறிவிக்கை !
சோறு போடுகின்ற பூமியை, குழாய் பதிக்கத் தோண்டுவது நம் தாயின் வயிற்றைக் கீறுவதர்க்குச் சமம்.

அண்டை மாநிலம் அணை கட்டுவதற்கு இங்கு உள்ள ஆற்று மணலை விற்கும் நம்மை, தெய்வம் கூட மன்னிக்காது !

இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சி என்ற பெயரில் திட்டங்களை நிறைவேற்றுவது வளர்ச்சியா..?வீக்கமா..? பதில் தேடுவோமாக.

 The Land is rich but the people are poor ..! The picture presents a Paradox !

கட்டிடம் ஜொலிக்கிறது; அஸ்திவாரம் அழுகிறது... உணர்ந்தால் உதவும்... உணராது போனால் உன் நிழலும்கூட வெறுக்கும் !

ஒருவர் உணர்ந்தாலும், அது உயரிய விருதாகும் ! சித்தர் பெருமக்களின் திருவடிகளுக்கு !

பி.கு "தமிழ்ச் சங்கங்களின் வரலாறு" நூலை இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் :
http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ6k0Yy

இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
https://solpudhithu10.blogspot.com/2019/02/blog-post_4.html

No comments:

Post a Comment